திரிகடுகம்
தூயவர் செயல்கள்:
“உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.”
அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை:
“இல்லார்க்கொன் றீயும் உடைமையும்
இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும்
எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும்
இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.”
புதரில் விதைத்த விதை:
“முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் நிறைஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.”
ஆசிரியர்-நல்லாதனார்
பாடல்-100
பொருள்-அறம்
சமயம்-வைணவம்
பாடல் விளக்கம்:
உண்பதற்கு முன் குளித்தல்,பொருள் கொடுத்தாலும் பொய் சாட்சி சொல்லாமல்
இருத்தல்,வறுமை நிலையில் ஒழுக்கம் குன்றாது இருத்தல் ஆகிய மூன்றும் மனம் மொழி
மெய்களால் தூய்மை உடையவரின் செயல்கள் ஆகும்.
வறுமையில் இருப்பவருக்கு உதவி செய்தல்,பொருளின்
நிலையை அறிந்து வாழ்தல்,எந்த உயிரையும் துன்பபடுத்தாமல் இருப்பது ஆகிய மூன்றும்
அறவழியில் நடப்போரின் செயல்கள் ஆகும்.
அறம் தவறி பெற்ற தலைமை,ஒழுக்கம் இல்லாமல் பெற்ற
தவம்,ஒழுக்கம் இல்லாதவன் பெற்ற அழகு ஆகிய மூன்றும் உடையவர்கள் புதரில் விதைத்த
விதை போன்று பயனற்றவர்கள்.
நூற்குறிப்பு:
திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் நல்லாதனார்.சுக்கு மிளகு திப்பிலியால் ஆன மருந்து
திரிகடுகம்.இதன் பாடல்கள் மூன்று கருத்துகளை தெளிவுபடுத்துகிறது.இந்நூல் நூறு
பாடல்களை கொண்டது.இந்நூலில் உள்ள பாடல்களின் கருத்துகள் கற்போரின் அறியாமையை
நீக்கி குன்றின் மேலிட்ட விளக்கு போல ஒளிரச் செய்யும்.
No comments:
Post a Comment