எட்டுத்தொகை - புறநானூறு
1. சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்
யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன்
மாதோ போர்க்களத்
தானே
பாடல் விளக்கம்:
(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று,
‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’
என்று கேட்டாள்.)
‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.
2. வாயி லோயே!
வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன் கொல்?
என் அறியலன் கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே;
அதனால்
காவினெம் கலனே;
சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச்
செலினும், அத்திசைச் சோறே.
பாவகை: நேரிசைஆசிரியப்பா
பாடல் விளக்கம்:
வாயில் காவல்னே!
வாயில் காவல்னே!
புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலை,
வள்ளல்களை
அணுகி அவர்தம் செவிகளிலே அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம்
எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது; அதே வேளையில் அவ்வள்ளல்கள் பற்றித் தாம் எழுதிய
கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டுமே என நினைந்து வருந்தும் தன்மையைக்
கொண்டது. பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே! விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட
நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ? (அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை
நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்னும் நினைப்புப் போலும்.) இவ்வுலகில், அறிவும்
புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை. இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை. (எங்களை
அறிந்து பரிசில் தரப் பல பேர் உள்ளனர்.) ஆகவே, எம் யாழினை எடித்துக்கொண்டோம்;
கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக்கொண்டோம். மரம் வெட்டும் தச்சனின் தொழில்
வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது
ஒரு மரம் கிடைக்காமலா போகும்? அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில்
எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
(பரிசிலர்க்குச்
சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவுக்குக் காட்டில்
உள்ள மரங்களும் உவமைகள்)
3. காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும்,
தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி,
வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான்,
உலகமும் கெடுமே.
பாவகை: நேரிசைஆசிரியப்பா
பாடல் விளக்கம்:
ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும். நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்டவிரும்புவது, யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது. அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.
4. வான் உட்கும் வடிநீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றுஅதன்
தகுதி
கேள்இனி மிகுதி ஆள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும்
படைத்திசினோரே!
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே! அதனால்
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே;
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம! இவண் தட்டோரே!
தள்ளாதோர் இவண்
தள்ளா தோரே!
பாடல் விளக்கம்:
வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே!
வலிமை மிக்க வேந்தனே! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல
விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்ய வேண்டியன என்னவென்று
கூறுகிறேன். கேட்பாயாக!
உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு
விளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே
முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.
நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று
சேர்த்தவர். நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த
நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது.
அதனால், நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக.
நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலையைப்
பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை
இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே
மடிவர்.
No comments:
Post a Comment