நாட்டுப்புறப்
பாடல்கள்
1. கடலோடு விளையாடு
விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா
விரி்கடலே பள்ளிக்கூடம் – ஐலசா
அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா
அருமைமேகம் நமதுகுடை – ஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா
விண்ணின்இடி காணும்கூத்து – ஐலசா
பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா
பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா
காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா
கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா
மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா
பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா
முழுநி்லவே கண்ணாடி – ஐலசா
மூச்சடக்கும்நீச்சல் யோகம் – ஐலசா
தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா
துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா
பாடல் விளக்கம்:
மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள்.
அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள். விரிந்த கடலே பள்ளிக்கூடம். கடல் அலையே
தோழன். மேகமே குடை, வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. விண்ணின் இடி
அவர்கள் காணும் கூத்து. சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல். பனிமூட்டம்தான் உடலைச்
சுற்றும் போர்வை. அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை. கட்டுமரம்தான்
அவர்கள் வாழும் வீடு. மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம். வலைவீசிப் பிடிக்கும்
மீன்களே அவர்களது செல்வம். முழு நிலவுதான் கண்ணாடி. மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே
அவர்கள் செய்யும் தவம். இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.
2. வயலும் வாழ்வும்
ஓடை எல்லாம் தாண்டிப்போயி - ஏலேலங்கிடி ஏலேலோ
ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து - ஏலேலங்கிடி ஏலேலோ
சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி - ஏலேலங்கிடி ஏலேலோ
சேத்துக்குள்ளே இறங்குறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோ
நாத்தெல்லாம் பிடுங்கையிலே - ஏலேலங்கிடி ஏலேலோ
நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோ
ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் - ஏலேலங்கிடி ஏலேலோ
ஓடியோடி நட்டோமையா - ஏலேலங்கிடி ஏலேலோ
மடமடன்னு மடைவழியே- ஏலேலங்கிடி ஏலேலோ
மண்குளிரத் தண்ணீர்பாய- ஏலேலங்கிடி ஏலேலோ
சாலுசாலாத் தாளுவிட்டு - ஏலேலங்கிடி ஏலேலோ
நாலுநாலா வளருதம்மா- ஏலேலங்கிடி ஏலேலோ
மணிபோலப் பால்பிடித்து - ஏலேலங்கிடி ஏலேலோ
மனதையெல்லாம் மயக்குதம்மா - ஏலேலங்கிடி ஏலேலோ
அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோ
ஆளுபணம் கொடுத்துவாரான் - ஏலேலங்கிடி ஏலேலோ
சும்மாடும் தேர்ந்தெடுத்து - ஏலேலங்கிடி ஏலேலோ
சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார்
- ஏலேலங்கிடி ஏலேலோ
கிழக்கத்தி மாடெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோ
கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலேலங்கிடி ஏலேலோ
கால்படவும் கதிருபூரா - ஏலேலங்கிடி ஏலேலோ
கழலுதையா மணிமணியா - ஏலேலங்கிடி ஏலேலோ
பாடல் விளக்கம்:
உழவு செய்யும் மக்கள் ஓடையைக் கடந்து சென்று
ஒன்றரைக் குழி
நிலத்தைத் தேர்ந்தெடுத்தனர். பெண்கள் புடவையை இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர்.
நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும்
பிடித்தனர்.
ஒரு சாணுக்கு ஒரு
நாற்று வீதம்
சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடைவழியே நீர்பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள்
வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு
விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த
நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று
களத்தில் சேர்த்தனர். கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு
மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள்
மணிமணியாய் உதிர்ந்தன.
3. கோணக்காத்துப்பாட்டு
உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து
உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்
பெரிதான வீடுகளெல்லாம் – கோப்புடனே
பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே
சிங்காரமாய் வாங்கல்நகரில் – வைத்திருந்த
தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே
மங்காத காங்கயநாட்டில் – மேட்டுக்காட்டில்
மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே
ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் – மெத்தைவீடு
அடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்
தாரங்களும் பிள்ளைகளுடன்– கூட்டிக்கொண்டு
தானடந்து வேகமுடன் கூகூவென்றார்
வாகுடனே தொண்டைமான்சீமை – தன்னிலே
வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானே
சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே
சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் – கடலிலே
தானடந்து வேகமுடன் வரும்போதிலே
கொம்புசுத்திக் கோணக்காத்து – காலனைப்போல்
கோணமழை வந்துகப்பல் தான்கவிழ்ந்ததே
ஆர்க்காடு மைசூர்வரைக்கும் – கோணக்காத்து
அலறி அலறிமெத்த அடித்ததனால்
மார்க்கமான சாலையில்போன – சனங்களெல்லாம்
மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களே
தெத்துக்காடு காளப்பநாயக்கன் – பட்டியிலே
செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்
சித்தர்கள் பொருந்திவாழும் – கொல்லிமலை
சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே
இப்படிக்கிச் சேதங்களானால் – குமரேசா
எப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்
மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு – வருகின்ற
விக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திடீரையா
பாடல் விளக்கம்:
திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய
வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. வாங்கல் என்னும்ஊரில்
அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. அழிவில்லாத காங்கேய நாட்டின்
மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து
வெறும் குச்சிகளாக மாறின.
அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன. ஆடவர் தம் மனைவி, பிள்ளைகளுடன் ‘கூ
கூ’ என்று அலறியபடி ஓடினர். தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள்
அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன. கடலில் விரைந்து வந்த கப்பல், எமனைப்
போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்தது.
ஆர்க்காடு முதல்
மைசூர் வரை வீசிய புயலால் சாலைகளில் சென்ற மக்கள் தடுமாறித்
தவித்தனர். தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான ஆடு
மாடுகள் இறந்தன. சித்தர்கள் வாழும் கொல்லி மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல்
அடித்தது.
முருகப் பெருமானே! இத்தகைய அழிவுகளை நாங்கள் எவ்வாறு தாங்குவோம்? எங்களுக்கு வருகின்ற
இடர்களை எல்லாம் தடுத்து எங்களைக் காப்பாயாக!
No comments:
Post a Comment