Wednesday

TNPSC Tamil - பத்துபாட்டு – மலைபடுகடாம்

 

பத்துபாட்டு – மலைபடுகடாம்      (Source TN Textbook)


அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

 

அலங்கு கழை நரலும் ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விரல்வேள் வயிரியம் எனினே,

 

நும்இல் போல நில்லாது புக்கு,

கிழவிர் போலக் கேளாது கெழீஇ

சேட் புலம்பு அகல இனிய கூறி

பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர்

 

பாடல் விளக்கம்:

              நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.

       ‘’பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்; எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்; சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்; அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சீற்றூரை அடையுங்கள். அங்குள்ளவர்களிடம், ‘பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்’ என்று சொல்லுங்கள்.

     அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர். நீண்ட வழியைக் கடந்துவந்த உங்களின் துன்பம்தீர இனிய சொற்களைக் கூறுவர். அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.’’

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....