Thursday

TNPSC Tamil - சிற்றிலக்கியங்கள் - தமிழ்விடு தூது

 

       சிற்றிலக்கியங்கள்


             தமிழ்விடு தூது  (Source TN Textbook)

 

சீர்பெற்ற செல்வம்

 

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழேபுத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமேஅந்தரமேல்

முற்றும்உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ

குற்றம்இலாப் பத்துக் குணம்பெற்றாய்மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ

நோக்கிய வண்ணங்கள் நூறுஉடையாய்நாக்குலவும்

ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு

ஆன நவரசம்உண் டாயினாய்ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ

 ஒழியா வனப்புஎட்டு உடையாய்….

பாடல் விளக்கம்:

           இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான விடுதலைத் தரும் கனியே! இயல் இசை நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக் கேட்பாயாக.

     தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். நீயும் அவற்றைப் படிக்க எடுத்துக் கொடுப்பாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ?

      பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று (பொருந்தி நின்று) என்றுமே ‘சிந்தா (கெடாத) மணியாய் இருக்கும் உன்னை (இசைப்பாடல்களுள் ஒருவகையான) ‘சிந்து’ என்று (அழைப்பது நின் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு) கூறிய நா இற்று விழும் அன்றோ?

      வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள்கூட சத்துவம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால், நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.

     மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்குமேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடைமெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

     நாவின்மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.     

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....