Tuesday

TNPSC Tamil - ஐம்பெருங்காப்பியங்கள் - மணிமேகலை

 

ஐம்பெருங்காப்பியங்கள்

மணிமேகலை  (Source TN Textbook)

 

விழாவறை காதை

 

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்

இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும்

சமயக் கணக்கரும் தந்துறை போகிய

அமயக் கணக்கரும் அகலா ராகிக் 

கரந்துரு எய்திய கடவு ளாளரும்

பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்

ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்

வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்           தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்              பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்           பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;       காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்;

பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்;

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்

பழமணல் மாற்றுமின்; புதுமணல் பரப்புமின்;

கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்

மதலைமாடமும் வாயிலும் சேர்த்துமின்;

 

தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்;

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்;

வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்

தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்

நாலேழ் நாளினும் நன்கறிந்தீர் என

ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்

களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி;

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்.                                                                                              

பாடல் விளக்கம்:

 

இந்திர விழாவைக் காண வந்தோர்

       உயர்வுடைய புகார் நகரில் மெய்ப்பொருள் உணர்த்தும் உலகியல், தத்துவம், வீடுபேறு ஆகிய பொருள்களை அவரவர் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப விளக்குபவராகிய சமயவாதிகள் கூடியிருக்கின்றனர். தமது நெறியில் சிறந்தவராக விளங்கும் காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் காலக்கணிதரும் கூடியிருக்கின்றனர். இந்நகரை விட்டு நீங்காதவராய்த் தம் தேவருடலை மறைத்து மக்கள் உருவில் வந்திருக்கும் கடவுளரும் கடல்வழி வாணிகம் செய்து பெரும் செல்வம் காரணமாய்ப் புகார் நகரில் ஒன்று திரண்டிருக்கும் பல மொழி பேசும் அயல் நாட்டினரும் குழுமியிருக்கின்றனர். அரசர்க்குரிய அமைச்சர் குழுவாகிய ஐம்பெருங்குழு, எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டிருக்கின்றனர்.

   

விழா முன்னேற்பாடுகள் பற்றி அறிவித்தல்

 

     தோரணம் கட்டிய தெருக்களிலும் குற்றமில்லாத மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு மற்றும் பலவகையான மங்கலப் பொருள்களை முறையாக அழகுபடுத்தி வையுங்கள். குலை முற்றிய பாக்கு மரத்தையும் வாழை மரத்தையும் வஞ்சிக்கொடியையும் பூங்கொடிகளையும் கரும்பையும் நட்டு வையுங்கள். வீடுகளின் முன் தெருத் திண்ணையில் வரிசை வரிசையாக இருக்கும் தங்கத் தூண்களிலே முத்து மாலைகளைத் தொங்கவிடுங்கள்.

      விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள். துகில் கொடிகளையும் கம்புகளில் கட்டிய கொடிகளையும் பெரிய மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் சேர்த்துக் கட்டுங்கள்.

 

பட்டிமண்டபம் ஏறுமின்

      குளிர்ந்த  மணல் பரப்பிய பந்தல்களிலும் மரங்கள் தாழ்ந்து நிழல்தரும் ஊர் மன்றங்களிலும் நல்லன பற்றிச் சொற்பொழிவாற்றுங்கள். அவரவர் சமயத்திற்கு உரிய உட்பொருளறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெரிந்து வாதிட்டுத் தீர்வு காணுங்கள்.

 

சினமும் பூசலும் கைவிடுக

     மாறுபாடு கொண்ட பகைவர்களிடம் கூடக் கோபமும் பூசலும் கொள்ளாது அவர்களைவிட்டு விலகி நில்லுங்கள். வெண்மையான மணல் குன்றுகளிலும் மலர் செறிந்த பூஞ்சோலைகளிலும் குளிர்ந்த ஆற்றிடைக்குறைகளிலும் மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த் துறைகளிலும் விழா நடைபெறும். அந்த இருபத்தெட்டு நாள்களிலும் தேவரும் மக்களும் ஒன்றுபட்டு மகிழ்வுடன் உலாவிவருவர் என்பதை நன்கு அறியுங்கள்.

 

வாழ்த்தி அறிவித்தல்

    ஒளிவீசும் வாளேந்திய காலாட் படையினரும் தேர்ப்படையினரும் குதிரைப் படையினரும் யானைப் படையினரும் சூழ்ந்து வர, அகன்ற முரசினை அறைந்து, ‘’பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் பெருகுவதாகுகஎன வாழ்த்தி மேற்கண்ட செய்திகளை நகருக்கு முரசறைவோன் அறிவித்தான்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....