Wednesday

TNPSC Tamil - பத்துபாட்டு – முல்லைப்பாட்டு


பத்துபாட்டு – முல்லைப்பாட்டு      (Source TN Textbook)

 

நல்லோர் விரிச்சி கேட்டல்

 

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல,               

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்செயல் பொழிந்த சிறுபுன் மாலை,

அருங்கடி மூதூர் மருங்கில் போகி,

யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லோடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை                                      

 அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்எனபோள்

நன்னர் நன்மொழி கேட்டனம்

 

பாடல் விளக்கம்:

             அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால்,

குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.

     துன்பத்தைச் செய்கின்ற அம்மாலைப்பொழுதில், முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்; அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின்முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

       அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள், ‘’புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே’’ என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.

      நின் தலைவன் பகைவரை வென்று திறைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே! என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....