Wednesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 7 - துணைப்பாடம்

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 7

துணைப்பாடம்   (Source TN Textbook)

சாதனைப் பெண்மணி மேரி கியூரி

       கியூரி அம்மையார் போலந்து நாட்டில் 1867 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். இவரே அவர்களுள் இளையவர்.

 

       இவர்தம் தந்தை  ஓர் அறிவியல் ஆசிரியர். ஆனாலும் குடும்பத்தில் வறுமை. தமக்கை மருத்துவக் கல்வி பயில விரும்பினார். ஆனால், போதிய வசதி இல்லை. இளையவள் மேரி, குழந்தைகளுக்குச் சிறப்புப் பாடம் சொல்லிக் கொடுத்தார்; செவிலிபோல் பணிவிடைகள் செய்தார். அதன்மூலம் பொருள் ஈட்டித் தம் தமக்கை கல்வி பயல உதவினார்.

 

        மேரி, பிரான்சு நாடு சென்று கல்லூரியில் சேர்ந்தார். தம் வாழ்வின் இலக்கான அறிவியல் கல்வியைப் பயின்றார். தம்முடைய வறுமையை யாரும் அறியாவண்ணம் கல்லூரி நாள்களைக் கழித்தார். ஒருமுறை மூன்று நாள் உணவு உட்கொள்ளாததனால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர் நல்ல உணவும் ஓய்வும் தரவேண்டும் எனக் கூறியபோது, உடன்பயிலும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து, பலவகையிலும் உதவினர்.

 

    அறிவியல் மேதை பியரி கியூரியை, மேரி திருமணம் செய்து கொண்டார். அவருடன் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மணவாழ்க்கையில் மனநிறைவுடன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், ஒரு வாரம் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு தம்முடைய அறிவியல் ஆராய்ச்சிப் பணிக்குத் திரும்பினார்.

 

       தம்முடைய வருவாயில் பெரும்பகுதியை ஆராய்ச்சிக்குச் செலவிட்டதனால், வீட்டுவேலைகளைக் கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து செய்தனர்; எளிமையாகவே வாழ்ந்தனர்.

 

     அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன், பியரி கியூரியும் மேரி கியூரியும் இயற்பியலில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இடைவிடாது செய்த ஆராய்ச்சியின் பயனாகக் கணவன்-மனைவி இருவரும் முதலில் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர்; அதன்பிறகு, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும் பியரி கியூரி, மேரி கியூரி இணையருக்கும் 1903ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதற்பெண்மணி மேரி கியூரி ஆவார்.

 

      ரேடியத்தின் உதவியால் மனித குலத்துக்குக் கேடு’ விளைவிக்கும் புற்றுநோய் மற்றும் பலவகைத் தோல்நோய்களைக் குணமாக்கலாம் எனக் கண்டறிந்தனர்.

 

       மேரி கியூரி தம்முடைய உடல்நலத்தைப் பணயம் வைத்துக் கண்டுபிடித்த ரேடியத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று 50 இலட்சம் டாலர்களுக்கு விலைக்கு வாங்க முன்வந்தது. ஆனால், தம்முடைய கண்டுபிடிப்பை அறிவியல் உலகத்துக்குக் கொடையாக வழங்கினார் கியூரி.

 

      அவருடைய கணவர் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்தபிறகு, பிரெஞ்சு அரசு, அம்மையாருக்கும் அவருடைய பெண் குழந்தைகள் இருவருக்கும் பொருளுதவி அளிக்க முன்வந்தது. ஆனாலும் மேரி, அதனை ஏற்க மறுத்தார்.

 

     அதன்பிறகு, அவருடைய கணவர் ஆற்றிய பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு அளிக்கப்பட்டது. அப்பணியை அவர் சிறப்பாகச் செய்தார். அவர் மேன்மேலும் வேதியியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக, அவருக்கு இரண்டாவது முறையாக 1911 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

       அதன்பிறகு, அவர் பல நாட்டினராலும் அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டார்; பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றார்.

 

       செயற்கரிய செய்த கியூரி அம்மையார் 1934ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

     கியூரி அம்மையாருக்குப்பின், அவர் மகள் ஐரினும் மருமகன் ஜோலியட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக 1935ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.

 

       ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நோபல் பரிசு பெற்ற இச்சாதனை இன்றுவரை எந்தக் குடும்பத்தினராலும் முறியடிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....