Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2
Language I - Tamil
இயல் 8
செய்யுள்
தனிப்பாடல்
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான் பண்ணி னானே.
வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம்
இணைக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி
எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!
குணக்கடலே அருட்கடலே அசுர ரான
குரைகடலை வென்றபரங் குன்று ளானே!
பாடல் 1 - பொருள்
கல்லையும் மண்ணையும் காய்ச்சிக்
குடிக்க இறைவன் சொல்லித் தரவில்லையே! பொன்பொருள் கொடுத்து என்னைக் காக்கவும்
இல்லையே! இதற்காக யாரைக் குற்றம் சொல்லி என்ன பயன்? எங்கும், எல்லாரிடமும்
பல்லைக்காட்டிப் பிழைக்குமாறு இறைவன் என்னைப் படைத்துவிட்டானே!
சொல்பொருள்
இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
ஆரைத்தான் – யாரைத்தான்
பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
புவி – உலகம்
பாடல் 2 – பொருள்
பாட்டுப்
பாடிப் பரிசு வாங்கப் பணம் படைத்தவர்களைப் பார்க்கப் போகும்போது, சிலநேரம் அவர்கள்
வணக்கம் சொல்லி வரவேற்கிறார்கள். சிலநேரம் என்னைக் கண்டதும் அவர்களுக்குக்
குமரகண்ட வலிப்பு வருகிறது. முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். சிலநேரம், என்னை
ஏறிட்டும் பார்க்காமல் வேண்டுமென்றே கணக்குப் புத்தகத்தைப் புரட்டுகிறார்கள்.
சிலநேரம் நாய்களைப்போலக் கடிக்க வருகிறார்கள். இப்படிப்பட்ட கயவர்களிடம் தமிழைப்
பாடிப்பாடிப் பரிசு வாங்க இன்னும் எத்தனை நாள், நான் திரிந்து அலைவேன்? ஒலிக்கும்
கடலாக இருந்த அரக்கர்களை வென்றவனே! திருப்பரங்குன்றத்தில் விளங்கும் முருகா! கூறு.
சொல்பொருள்
குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்புநோய்
இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும்படி
குணக்கடலே! அருட்கடலே! – முருகனை இவ்வாறு அழைக்கிறார்
குரைகடல் – ஒலிக்கும் கடல்; அசுரர்கள் கடல் வடிவில்
வந்தார்கள் என்பது கதை
பரங்குன்றுளான் – திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
நூற்குறிப்பு
புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள்
தொகுக்கப்படாமல் இருந்தன. அவற்றைத் ‘தனிப்பாடல் திரட்டு’ என்னும் பெயரில்
தொகுத்துள்ளனர். பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள்
பாடப்பட்டவை. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர்
இராமச்சந்திரக்கவிராயர்; துன்பத்தையும் நகைசுவையோடு சொல்வதில் வல்லவர் இவர்.
அந்தக் காலம்
இந்தக் காலம்
நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது
அந்தக் காலம் – எதையும்
நேரில் பார்த்தே நிச்சயிப்பது
இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்
மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது
அந்தக் காலம் – அது... அந்தக் காலம்
மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது
இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்
இழிகுலம் என்றே இனத்தை வெறுத்தது
அந்தக் காலம் – மக்களை
இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவது
இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்
திரோபதை தன்னைத் துயில் உறிஞ்சது
அந்தக் காலம் பெண்ணைத்
தொட்டுப் பாத்தா சுட்டுப்புடுவான்
இந்தக் காலம் ஆமா.. இந்தக் காலம்
சாஸ்திரம் படிப்பது அந்தக் காலம்
சரித்திரம் படிப்பது இந்தக் காலம்
கோத்திரம் பார்ப்பது அந்தக் காலம்
குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம்
பக்தி முக்கியம் அந்தக் காலம்
படிப்பு முக்கியம் இந்தக் காலம்
கத்தி தீட்டுவது அந்தக் காலம்
புத்தி தீட்டுவது இந்தக் காலம்
பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சது
அந்தக் காலம் – வாழ்வின்
கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது
இந்தக் காலம் ஆமா... இந்தக் காலம்.
ஆசிரியர் குறிப்பு:
உடுமலை
நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார். பாமர
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச்
சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர். ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனத் தமிழக
மக்களால் அழைக்கப்படுபவர். இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை.
No comments:
Post a Comment