Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 5 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 5

துணைப்பாடம்  (Source TN Textbook)

தங்கமாம்பழமும் சூட்டுக்கோலும்

                      (நாடகம்)

                     காட்சி – 1

இடம்: அரண்மனை

பாத்திரங்கள்: அரசர், அரசரின் நோயுற்ற தாய், அமைச்சர், வைத்தியர்கள், சேவகர்கள்

 

அரசர்: (வருத்தத்துடன்) அரண்மனை வைத்தியரே... என்னை ஈன்ற அன்புத் தாயாரின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?

அரண்மனை வைத்தியர்: பொறுத்தருளுதல் வேண்டும் அரசே! நாடியைப் பிடித்துப் பார்த்ததில் தங்களின் தாயார் பிழைப்பது கடினம் என்று தெரிகிறது; இன்னும் சில நாளே இருப்பார். ஆகவே, அவர் விரும்பியதனைச் செய்து அவரை மகிழ்விக்கலாம்.

அரசர்: அப்படியா...!

 

(தாயாரின் அருகே செல்கிறார் அரசர்.)

 

தாயே! தங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள். அதனை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்.

 

(அரசரின் தாயார் முனகியபடி ஏதோ மெல்ல சொல்கிறார். புரிந்துகொண்ட அரசர் ஆணையிடுகிறார்.)

 

அரசர்: அமைச்சரே! என் அன்னை, மாம்பழம் சாப்பிட விரும்புகிறார். இதுவே அவர்தம் விருப்பம். உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!

அமைச்சர்: பொறுத்தருளுதல் வேண்டும் அரசே! இது மாம்பழக்காலம் இல்லை.

அரசர்: எங்கிருந்தாலும் சரி, அண்டைநாடு சென்றாவது மாம்பழம் கொண்டு வாருங்கள். சேவகர்களே! உடனே புறப்படுங்கள்.

சேவகர்கள்: அப்படியே ஆகட்டும்... அரசே!

 

(சேவகர்கள் பல திசைகளிலும் சென்று அலைகிறார்கள். ஆனால், மாம்பழம் கொண்டு வருவதற்குள் அவருடைய தாயாரின் உயிர் பிரிந்துவிடுகிறது. அரசர் பெருங்கவலை கொள்கிறார்.)

 

                     காட்சி – 2

இடம்: அரசவை

பாத்திரங்கள்: அரசர், அமைச்சர், தெனாலிராமன்.

 

அரசர்: என் அன்னையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சி என்னை அரித்துக் கொல்கிறது. அவருடைய மனம் அமைதி அடையாமலே உயிர் பிரிந்துவிட்டதே!

அமைச்சர்: வருந்த வேண்டா, அரசே! அதற்குப் பரிகாரம் செய்யலாம். இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து நீங்கள் தப்பிக்க வழி இருக்கிறது, அரசே!

அரசர்: என்ன வழி சொல்லுங்கள்!

அமைச்சர்: சொல்கிறேன், அரசே! நூற்றெட்டுத் துறவிகளுக்குத் தங்கத்தில் மாம்பழம் செய்து, தானமாகக் கொடுத்து விருந்து வைத்தால், உங்கள் தாயாரின் மனம் அமைதி அடையும்.

அரசர்: ஆகட்டும், அமைச்சரே! விரைவில் இது நடக்க ஏற்பாடு செய்யுங்கள்.

அமைச்சர்: அப்படியே ஆகட்டும், அரசே!

 

(பின்னர் தடபுடலான விருந்து நடக்கிறது. அனைவருக்கும் தங்க மாம்பழங்களை அரசர் வழங்குகிறார். அந்நேரத்தில் அரசவை விகடகவி தெனாலிராமன் அங்கு வருகிறார்.)

 

தெனாலிராமன்: (சிந்தித்தவாறு) அஃதெப்படி, இவர்களுக்குத் தங்க மாம்பழம் கொடுத்தால் அரசரின் இறந்துபோன தாயார் மனம் எப்படி அமைதி அடையும்? எவ்வளவு பொருள் செலவு? இது பொருத்தமற்ற செயலாக உள்ளதே! இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுகிறேன்.

 

(ஒரு முடிவோடு தெனாலிராமன் செல்கிறார்.)

 

                     காட்சி – 3

இடம்: அரண்மனை

பாத்திரங்கள்: தங்கமாம்பழம் பெற்றவர்கள், தெனாலிராமன்.

 

தெனாலிராமன்: நண்பர்களே! சென்ற ஆண்டு என் தாயார் இறந்தது உங்களுக்குத் தெரியும். என் தாயின் இறுதி ஆசையை நிறைவேற்ற இயலவில்லை என்கிற குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். இன்றுமாலை என் இல்லத்தில் பரிகார விழா நடைபெற உள்ளது. அனைவரும் தவிராமல் வருதல் வேண்டும்.

தங்கமாம்பழம் பெற்றவர்கள்: (தங்கமாம்பழத் திட்டம் நன்கு வேலை செய்கிறதே என எண்ணியபடி) இராமா! கவலை வேண்டா, நாங்கள் உறுதியாக வந்துவிடுகிறோம்.

 

                காட்சி – 4

இடம்: தெனாலிராமன் இல்லம்

பாத்திரங்கள்: தெனாலிராமன், தங்கமாம்பழம் பெற்றவர்கள்.

 

(மாலை நேரம் – தெனாலிராமன் வீட்டில் நூற்றெட்டுப் பேரும் அறைக்குள் செல்கின்றனர். அனைவரையும் குனியச் செய்து பழுக்கக் காய்ச்சிய கம்பியால் தெனாலிராமன் சூடு போடுகிறார்.)

 

ஒருவர்: அய்யோ... எரியுதே!

மற்றொருவர்: அம்மா... சூடு தாங்க முடியவில்லையே!

 

(சூடுபட்டவர்கள் வலி பொறுக்காமல் அலறுகின்றனர். இச்செய்தி அரசவையை எட்டுகிறது.)

 

                காட்சி – 5

இடம்: தெனாலிராமன் இல்லம்

பாத்திரங்கள்: அரசர், தெனாலிராமன், சூடுபட்டவர்கள்.

 

அரசர்: தெனாலிராமா, ஒழுங்காகச் சொல். இவர்கள் முதுகில் சூடு வைத்தாயாமே! என்ன செயல் இது? ஏன் இப்படிச் செய்தாய்?

தெனாலிராமன்: அரசே, என் தாயார் வலிப்புநோய் வந்து காலமானார். வைத்தியர்கள் சூட்டுக்கோலைப் பழுக்கக் காய்ச்சி, அவருக்குச் சூடுபோட்டால் வலிப்புத் தீரும் என்றார்கள். ஆனால், சூட்டுக்கோல் சூடு ஏறுவதற்குள் தாயாரின் உயிர் பிரிந்துவிட்டது! தாயாருக்குச் செய்யாமல் விட்ட மருத்துவத்தை, நூற்றெட்டுத் துறவிகளுக்கும் செய்தால், என் தாயாரின் மனம் அமைதி அடையும் என்பதனால், இப்படிச் செய்தேன், அரசே!

அரசர்: பொருத்தமற்றுப் பேசுகிறாயே! இவர்களுக்குச் சூடுபோட்டால், இறந்துபோன உன் தாயாரின் மனம் எப்படி அமைதி அடையும்?

தெனாலிராமன்: இவர்களுக்குத் தங்கமாம்பழம் கொடுத்தால், மாம்பழம் சாப்பிடாமல் இறந்துவிட்ட தங்கள் தாயாரின் மனம் அமைதி அடைவதனைப் போலத்தான், இதுவும் அரசே!

 

(தெனாலிராமனின் கருத்து அரசரைச் சிந்திக்க வைத்தது. தம்முடைய தவற்றை அரசர் உணர்கிறார். அரசரின் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது.)

 

அரசர்: மூடநம்பிக்கையால், ஆராய்ந்து பார்க்காமல் நான் செய்த தவறான செயலை, உன் அறிவினால் தெளிய வைத்த இராமா, உன் அறிவை மெச்சுகிறேன், நீ வாழ்க!

 

(சூடுபட்டவர்கள் தலைகவிழ்ந்து நிற்றல்.)


No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....