Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 2 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I -  Tamil

6ம் வகுப்பு  

           இயல் 2

உரைநடை   (Source TN Textbook)

பறவைகள் பலவிதம்

 

          விழாக்கள் என்றதும் நமக்கெல்லாம் மகிழ்ச்சி பீறிட்டு எழும். ஏனெனில், விழாக்களின் போது, நம் வீட்டில் பட்டாசு வெடிக்கலாம். எத்தனை வகையான வண்ணங்களில் பட்டாசுகள் இப்போது வந்துவிட்டன. கம்பி மத்தாப்பில் தொடங்கி, வானவெளியில் பாய்ந்து வண்ண வண்ணப் பூக்களாய் விரியும் வெடிகள்வரை எத்தனை வியப்பூட்டும் பட்டாசுகள்.

 

        பட்டாசு வெடிக்காத மக்கள் யாராவது உலகத்தில் இருப்பார்களா? இருக்கவே மாட்டார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

 

      ஆனால், பட்டாசு வெடிக்காத ஓர் ஊரே இருக்கிறது. நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் கூந்தன்குளம். அந்த ஊர் மக்கள் பட்டாசே வெடிப்பதில்லை. அது மட்டுமன்று. அந்த ஊரில் யார் வீட்டில் திருமணம் நடைபெற்றாலும், ஊர்க்கோவிலில் திருவிழா நடைபெற்றாலும், டும்டும் ஒலி எழுப்பும் மேளதாளம் இடம்பெறாது. இவ்வளவு ஏன்? அந்த மக்கள் உரக்கப் பேசுவதுகூடக் கிடையாது.

 

       ஏன் அப்படி?

 

       ஏனெனில், அந்த ஊரில் உள்ள பெரிய ஏரி, பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது.

 

        பறவைகள் ஏன் நாடுவிட்டு நாடு பறந்து வருகின்றன? பருவநிலை மாறும்போது பறவைகள் இடம்விட்டு இடம் பெயர்கின்றன. பருவநிலை என்றால் என்ன? மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடுகிறார்கள். ஏனெனில், அப்போது வெயில் மிகக் கடுமையாக இருக்கும்.

 

    வெயில் சுட்டெரிக்கும் காலத்தைக் கோடைக்காலம் என்கிறோம். விடாமல் மழை பெய்தால், மழைக்காலம் என்கிறோம்.

 

    மார்கழி மாதம் பனிபெய்யும். அதனைப் பனிக்காலம் என்கிறோம். வெயிலும் மழையும் பனியும் மாறிமாறி வருவதனைப் பருவநிலை மாற்றம் என்கிறோம்.

 

      உலகத்தின் சில பகுதிகளில் பனி உறையும் காலம் உண்டு. பனி கூடினால் நாம் போர்வை அல்லது கம்பளியால் போர்த்திக் கொண்டு படுத்துக்கொள்கிறோம். ஆனால், பறவைகளுக்குப் போர்வை கிடையாதே. ஆகவே, அவை பனி கூடியதும் அந்த இடத்தைவிட்டுப் பறந்து வேறு இடத்துக்குச் செல்கின்றன.

 

      சில இடங்களில் வெயில் கூடுதலாக இருக்கும். அப்போதும், அந்த இடத்தைவிட்டுப் பறந்து செல்ல வேண்டியதுதான். இப்படிப் பறந்து செல்வதனை, ‘வலசைபோதல்’ என்பார்கள்.

 

       பருவகால மாற்றத்தைப் பறவைகள் நமக்கு உணர்த்துகின்றன. அந்தக் காலத்தில் பறவைகள் இடம் மாறுவதனை வைத்து, ‘இன்றைக்கு மழைவரும் போலிருக்கே’ என்று, நம் முன்னோர்கள் கூறிவிடுவார்கள்.

 

     பறவைகள் ஒரு நாட்டில் பழங்களைத் தின்றுவிட்டுப் பறந்துசென்று இன்னொரு நாட்டில் எச்சமிடுகின்றன. அந்த எச்சம் மண்ணில் விழும்போது, அப்பழத்தின் விதை அங்கு முளைத்து மரமாகி விடுகிறது. இப்படி உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளைப் பரப்பும் வேலையைப் பறவைகள் செய்கின்றன.

 

     வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்றுவிடுகின்றன. அதன்மூலம் பறவைகள் உழவர்களுக்கு உதவுகின்றன. இப்படிப் பல உதவிகள் செய்யும் பறவையானது, மனிதர்களின் நல்ல நண்பன் அல்லவா?

 

    அப்படிப்பட்ட நண்பனைப்பற்றித் தெரிந்துகொள்வோம். நமக்குத் தெரிந்த பறவைகள் எத்தனை? காகம், குருவி, கொக்கு, மயில் போலச் சில பெயர்களே நமக்குத் தெரிகின்றன.

 

      ஆனால், நம் நாட்டில் மட்டும் ஏறத்தாழ ஈராயிரத்து நானூறுவகைப் பறவைகள் வாழ்கின்றன. சில பறவைகளின் பெயர்களை நாம் தெரிந்துகொள்வோம்!

 

பறவைகளை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

 

1. தேனைக் குடித்து வாழும் பறவைகள்

2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்

3. பூச்சிகளைத் தின்று வாழும் பறவைகள்

4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்

5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்

 

     பறவைகளுள் சில, அழகாகக் கூடுகட்டி வாழ்பவை. நம் ஊர்களில் தூக்கணாங்குருவியின் கூடுகளைப் பார்க்கலாம். அடடா, எத்தனை அழகுடனும் பாதுகாப்பாகவும் தூக்கணாங்குருவி கூடு கட்டுகிறது!

 

      இப்படிப்பட்ட நம் பறவை நண்பர்களைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டும். தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? அவை நிம்மதியாக வாழ உதவியும் செய்தல் வேண்டும். பறவைகளுக்கு நாம் எப்படியெல்லாம் உதவலாம்?

 

    கூந்தன்குளம் சிற்றூர் மக்கள் பட்டாசு வெடிக்காமலும் மேளம் அடிக்காமலும் இருப்பது பறவைகள் அச்சமற்று இருக்கவே. அதுபோல, பல உதவிகளை அவற்றுக்கு நாமும் செய்யலாம். கூந்தன்குளம் மட்டுமல்லாமல், எங்கெல்லாம் பறவைகள் புகலிடம் இருக்கின்றதோ, அங்கெல்லாம் நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது.

 

    உங்கள் ஊருக்குப் பக்கத்திலுள்ள புகலிடத்துக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். வெளிநாடுகளிலிருந்து அங்கு வரும் பறவைகளைக் கண்டு மகிழுங்கள். நாள்தோறும் விடியற்காலையிலும் மாலையிலும் பறவைகள் எழுப்பும் ஒலிகளைக் கூர்ந்து கேட்போம். பறவைகள்போல ஒலிஎழுப்பி அவற்றோடு பேசுவோம்.

 

    பறவைகளின் வாழ்விடங்களான மரங்களைப் பாதுகாப்பதே அவற்றுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....