Tamil
Nadu Teachers Eligibility Test – Paper 2
Language I - Tamil
6ம் வகுப்பு
இயல் 3
துணைப்பாடம் (Source TN Textbook)
வீரச்சிறுவன்
மக்கள்
நெருக்கம் மிகுந்தது கொல்கத்தா நகரம். அந்நகரின் சாலையில் மக்கள் கூட்டத்தை
விலக்கிக் கொண்டு ஒரு குதிரைவண்டி விரைவாக ஓடிக்கொண்டிருந்தது. வண்டியினுள்
நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருத்தியின் மடியில் பச்சிளங்குழந்தை ஒன்று இருந்தது.
வண்டிக்காரனின் கட்டுப்பாட்டில் இருந்த குதிரை, திடீரென நாலுகால்
பாய்ச்சலில் சிட்டாகப் பறக்கலாயிற்று. குதிரையை அடக்க இயலாத வண்டிக்காரன் தூக்கி
எறியப்பட்டுக் கீழே விழுந்தான்.
வண்டியினுள் உட்கார்ந்திருந்த பெண்மணி பதறினாள். அவள், குழந்தையைத் தன்
மார்போடு அணைத்துக் கொண்டு அழுதாள். வண்டியின் மரச்சட்டம் ஒன்றனைப் பற்றியவாறு
மூச்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
ஐயோ...
என்று அலறியவாறு அவள், காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! எனக் கூக்குரலிட்டாள்.
அவளின்
குரலுக்கு அவ்வழியே சென்ற எவரும் செவி சாய்க்கவில்லை. அவர்கள், தங்களைக்
காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் தறிகெட்டு ஓடும் குதிரைக்கு அஞ்சி ஒதுங்கிக்
கொண்டார்கள்.
அப்போது, ஏறத்தாழப் பதினைந்து வயதுள்ள சிறுவன் ஒருவன் அக்கூக்குரலைக்
கேட்டான். கேட்டு, அவளையும் அவளின் குழந்தையையும் எப்படியாவது காப்பாற்றிவிட
வேண்டும் என எண்ணினான்.
துடிப்புமிக்க அச்சிறுவன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போலப் பாய்ந்து
சாலைக்கு வந்தான். அவன் குதிரைமீது தாவி ஏற முயன்றான். ஆனால், குதிரை துள்ளிக்
குதித்து, முதுகை நெளித்து அவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடியது. மீண்டும் எழுந்த அவன்,
முன்போலவே குதிரைமீது ஏறி உட்கார முயன்றான்.
அந்தப்
பொல்லாக் குதிரை, அவனை மீண்டும் மீண்டும் கீழே தள்ளிவிட்டது. இப்படிப் பலமுறை
முயற்சி செய்தான் அச்சிறுவன். அவனுக்குக் கை, கால், முகமென உடல் முழுவதும்
சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
அவற்றிலிருந்து இரத்தம் கசிந்தாலும், அதற்காக அவன் சிறிதும் மனம்
வருந்தவில்லை. மீண்டும் மீண்டும் முயன்று குதிரைமீது ஏறினான். ஏறிய அச்சிறுவன்,
அதனை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வண்டியைச் சாலையோரமாக
நிறுத்தினான். உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த அப்பெண்மணி, பெருமூச்சு
விட்டுக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் எனக் கீழே இறங்கினாள்.
அதுவரையில் சாலையோரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
கூட்டம் விரைந்தோடி வந்து வண்டியைச் சூழ்ந்துகொண்டது. அனைவரும் அந்த
வீரச்சிறுவனின் மனவுறுதியை வாயாரப் புகழ்ந்தனர்.
குதிரையை அடக்கிய அச்சிறுவன், எவருடைய புகழ்மொழிக்கும் மயங்கவில்லை. தன்
உடலிலும் உடையிலும் ஒட்டியிருந்த புழுதியைத் தட்டிவிட்டான். தான் செய்தது
அரும்பெருஞ்செயல் என்பதனைப் பற்றிச் சிறிதும் நினைக்கவில்லை. தான் செல்லவேண்டிய
பாதையில் தன் நடையைத் தொடர்ந்தான்.
குழந்தைகளே! உறுதிமிக்க அந்த வீரச்சிறுவன் யார் தெரியுமா?
அவன்
பெயர் நரேந்திரதத். பெயரை எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? ஆம். பிற்காலத்தில்
உலகம் புகழ உயர்ந்த சுவாமி விவேகானந்தரே அந்த வீரச்சிறுவன்.
No comments:
Post a Comment