Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2
Language I - Tamil
6ம் வகுப்பு
இயல் 4
உரைநடை (Source TN Textbook)
மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம்
நமது இந்திய நாட்டின்
விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் ஜவகர்லால் நேரு. இவர், நம் நாடு
விடுதலை பெற்றபின் முதல் முதன்மை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.
அவருடைய அன்பு மகள்தான்
இந்திராகாந்தி. 1922ஆம்
ஆண்டுமுதல் 1964ஆம் ஆண்டுவரை
42 ஆண்டுகள்
தம் மகளுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார்.
நேரு வெளிநாட்டுக்குச் சென்ற
பொழுதும், இந்தியாவில் இருந்தபொழுதும் மகளுக்குக் கடிதங்கள் எழுதினார். சிறைச்
சாலையில் அடைக்கப்பட்ட பொழுதும்கூட, அவர் கடிதம் எழுதுவதனை நிறுத்தவே இல்லை.
தாகூரின் விசுவபாரதி கல்லூரியில்
இந்திராகாந்தி சேர்ந்தபோது, அவர் எழுதிய கடிதம் இது. விசுவபாரதி கல்லூரி மேற்கு
வங்காளத்தில் சாந்திநிகேதன் என்னும் இடத்தில் உள்ளது.
(அக்கடிதத்திலிருந்து ஒருபகுதி மட்டும் இங்கே
பாடமாகத் தரப்பட்டுள்ளது.)
அல்மோரா மாவட்டச்
சிறைச்சாலை,
1935 பிப்ரவரி 22.
செல்லமகள் இந்து!
சிறைச்சாலையில் நான்
நலமாக இருக்கிறேன். கிருபாளினியின் உதவியுடன் படிக்கவேண்டிய பாடங்களை நீ முடிவு
செய்துவிட்டாய் போலும். மகிழ்ச்சி. இப்படிப் பேராசிரியர்களைத் தனிப்பட்டமுறையில்
சந்தித்துக் கலந்துரையாடுவது நல்லது. வகுப்பில் உட்கார்ந்து பாடங்களைக்
கேட்பதனைவிட, இந்த அணுகுமுறை நல்லது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்
நான் படிக்கும்போது, அதுதான் நிலைமை. வகுப்பறையில் நடக்கும் உரையாடல்களுக்கு
நாங்கள் பெரிய முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம்;ஆசிரியர்களைத் தனியாகச் சந்தித்து
உரையாடுவோம். அந்த உரையாடல் எங்கள் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன் உடையதாக
இருந்தது.
நீ படிக்கும் சாந்திநிகேதனில்
இத்தகைய நடைமுறை இருக்கிறதா? என்பது தெரியவில்லை; இல்லாவிட்டால் என்ன? ஆசிரியர்களைத்
தனியே சந்தித்து உரையாடும் பழக்கத்தை நீ கடைப்பிடி.
நீ வாசிப்பதற்காக அவ்வப்போது
புத்தகங்களை நான் அனுப்பலாமா? எனக் கேட்டிருந்தேன்; நீயும் அனுப்பச் சொல்லி எழுதி
இருக்கிறாய். இப்போது எனக்குள் திகைப்பு என்னவென்றால், உனக்கு எப்படிப்பட்ட
புத்தகங்களை அனுப்புவது என்பதுதான்.
புத்தகம் வாசிப்பதனைக் கடமையாக
ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால், புத்தக வாசிப்பு
மகிழ்ச்சியைத் தராது. வெறுப்பே உண்டாகும். அதுமட்டும் அன்று; எந்தப்
புத்தகத்தையும் வாசிக்க ஆசை வராது. முன்பு எல்லாம் நம்முடைய பாடப்புத்தகங்களும்
தேர்வுகளும் இப்படி வெறுப்பு உண்டாக்கும் விளைவைத்தான் செய்தன. சேக்ஸ்பியர்,
மில்டன் முதலியோர் எவ்வளவு அற்புதமான ஆங்கிலப் படைப்பாளிகள்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான
புத்தகம் பிடிக்கும். குழந்தையாய் இருக்கும்போது, ஒருவகையான புத்தகம் பிடிக்கும்.
இளைஞராய் இருக்கும்போது, ஒருவகையான புத்தகம் பிடிக்கும்; வயது ஆக ஆக விருப்பம்
மாறும்.
உனக்கு என்ன புத்தகம் வாசிக்கப்
பிடிக்கும் எனச் சொல்! உனக்குக் கவிதை வாசிக்கப் பிடிக்குமா? அல்லது வரலாறு,
நாட்டு நடப்பு, பொருளாதாரம் முதலிய புத்தகங்கள் பிடிக்குமா? உன் ஈடுபாடு
தெரிந்தபின் எந்தப் புத்தகம் வாசிக்கலாம் என்பது குறித்து, உனக்கு எழுதுவேன்.
உன்மீது புத்தகங்களைத் திணிக்க நான் விரும்பவில்லை.
சில புத்தகங்கள் பற்றிப்
பொதுவாகப் பேசலாம். பிளேட்டோவின் புத்தகங்கள் சுவையானவை; சிந்தனையைத் தூண்டுபவை.
கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தைத் தூண்டுபவை. அவை சுருக்கமாகவும் இருக்கும்;
வாசிக்க எளிதாகவும் இருக்கும். நாடகங்களைப் பற்றிப் பேசுகிறோம். அது சரி! நீ
காளிதாசரின் சாகுந்தலம் நாடகத்தை வாசித்திருக்கிறாயா? அது வாசிக்க வேண்டிய நூல்.
சென்ற ஆண்டு டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ என்னும் நாவலை
வாசிக்கப் போவதாகச் சொன்னாய்; வாசித்துவிட்டாயா? உலகின் மிகச் சிறந்த நூல்களுள்
அதுவும் ஒன்று. பெர்னாட்ஷாவின் பல நூல்களை நீ வாசிக்கவில்லை. அவருடைய நூல்கள்
வாசிக்கத் தகுந்தவை.
எனக்கு
மிகவும் பிடித்தமானவர் பெட்ரண்ட் ரஸ்ஸல். அவருடைய ஆங்கிலம்
அருமையானது. அறிவார்ந்த எழுத்து அவருடையது.
நாம்
ஏன் புத்தகம் வாசித்தல் வேண்டும்? அறிவு பெறுவதற்காக, மகிழ்ச்சி அடைவதற்காக எனப்
பல காரணங்களைச் சொல்லலாம். அவை உண்மைதாம். ஆனால், இதற்குமேலும் ஒரு காரணம் உண்டு.
ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை. அதனைப் புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும்
புத்தகப் படிப்பு இன்றியமையாதது.
தனியொரு
மனிதனின் பட்டறிவு மிகவும் குறுகியது. புத்தகங்களில் மனிதர்களின் ஏராளமான
பட்டறிவுச் சிந்தனைகள் அடங்கி உள்ளன. அவற்றை வாசிக்கும்போது, நாம் வசிக்கும்
சிறுமூலையிலிருந்து வெளியேறுகிறோம். மலைமீது ஏறிநின்று, இதுவரை பார்க்காத உலகக்
காட்சிகளைப் பார்க்கும் உணர்வைப் பெறுகிறோம்.
அன்புமிக்க,
உன் அப்பா.
சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
டால்ஸ்டாய் – இரஷ்ய நாட்டு எழுத்தாளர்
பெர்னாட்ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
பெட்ரண்ட் ரஸ்ஸல் – சிந்தனையாளர்; கல்வியாளர்
அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
கிருபாளினி – விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.
No comments:
Post a Comment