Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2
Language I - Tamil
6ம் வகுப்பு
இயல் 9
துணைப்பாடம்
வணக்கம் ஐயா!
சந்தை கூடி இருந்தது. வகைவகையான பொருள்களை விற்கும் பல்வேறு கடைகள்.
கூவிக்கூவிப் பொருள்களை விற்கும் வணிகர்கள். திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள்
கூட்டம். காய்கறி, பழங்கள், மட்பாண்டங்கள், துணிமணிகள்... இப்படிப் பல பொருள்களும்
விற்கும் கடைகளுக்கு நடுவே மாறுபட்ட ஒரு குரல் ஒலித்தது.
“சொல்
வாங்கலியோ... சொல்!
நாக்குல
நல்ல சொல் இருக்கு; கெட்ட சொல்லும் இருக்கு.
சொல்
வாங்கலியோ... சொல்...!
அங்கே
போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்கள்.
பெரியவர் ஒருவர் கேட்டார்: “இந்த ஊர்ச்சந்தை மிகவும் புகழ்மிக்கது. இங்க
புடலங்காயில் இருந்து, புதுத்துணி வரைக்கும் எல்லாம் வாங்கலாம். ஆனா, நீ சொல்லை
விற்கிறாயே! இது புது வாணிகமாக இருக்கே...?”
அந்த
வணிகர் சொன்னார்: “புது வாணிகந்தாங்க... வாழ்க்கையில் காயம்பட்ட மக்களுக்கும்
கவலைப்படுகின்ற மக்களுக்கும் ஆறுதல் சொல் வேண்டும். குழப்பத்துல தவிக்கின்ற
கோடானுகோடி மக்களுக்கும் சொல் வேணும்... அதனால்தான் சொல்லை விற்கிறேன்...”
பக்கத்தில் ஏதோ சத்தம் உரக்கக் கேட்டது. அப்பாவியாகத் தோற்றம் அளித்த
ஒருவன் இரு கைகளையும் நீட்டி வானத்தைப் பார்த்துச் சுற்றிச்சுற்றி வந்தான்.
பக்கத்தில் இருந்தவர்கள் “என்னப்பா இப்படி, உன்னையே சுற்றிக் கொள்கிறாயே” எனக்
கேட்டனர்.
“அம்மாவும் நானும் சந்தைக்கு வந்தோம். அம்மாவைக் காணோம்; சுற்றிச் சுற்றித்
தேடச் சொல்லி ஒருவர் சொன்னார். அதனால்தான் சுற்றுகிறேன்.” என்றான், அந்த அப்பாவி.
“சரியான
முட்டாள் நீ” என்றான் ஓர் ஆள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சொல் வணிகர், “சில
முட்டாள்களையும் அறிவாளியாக்க சொல் என்னிடம் இருக்கிறது...” என்று சொன்னார்.
அப்பாவி, அவரிடம் வந்து, “என்ன விற்கிறீங்க?” என்று கேட்டான். “சொற்களை
விற்கிறேன். காசு இருந்தால் கொடு. உனக்கும் சொற்கள் தேவைப்படும்...” என்றார்,
வணிகர்.
“என்கிட்ட
காசு இல்லைங்க... நாளைக்குத் தர்றேனே...” என்ற அந்த அப்பாவியிடம், “சரி, உன்னைப்
பார்த்தால் பாவமாக இருக்கு. நான் ஒரு சொல்லைத் தர்றேன்... நீ எல்லாரிடமும் அதனையே
சொல்லு. ‘வணக்கம்...’ அதுதான், நான் உனக்குக் கொடுக்கும் சொல்.”
அப்பாவி
அவரிடம், ‘வணக்கம்’ சொல்லிவிட்டு அப்புறம் சென்றான். சற்றுத்தொலைவு செல்வதற்குள்
வெளிநாட்டுப் பயணி ஒருவர் எதிரே வந்தார். அவரைப் பார்த்தவுடன், “வணக்கம்” என்றான்
அப்பாவி. அவரது முகம் பூப்போல் மலர்ந்தது. மகிழ்ச்சியாய் அப்பாவியை அணைத்துக்
கொண்டார்; தட்டிக் கொடுத்தார்.
“காலையிலிருந்து ஏன் என்று கேட்பார் இல்லாமல் வழிகேட்டு அலைந்தேன்.
வந்தவர்களை மதிக்கத் தெரிந்தவன் நீதான்... ‘வணக்கம்’ என்னும் சொல்லை எவ்வளவு
அன்புடன், அழகாகச் சொல்கிறாய். அருமை... அருமை..” எனப் பாராட்டினார். அத்துடன்
நிற்கவில்லை; பொற்காசுகளையும் வழங்கினார்.
அப்பாவி
மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல் வணிகரிடம் போய் நடந்ததனைச் சொன்னான். அவரிடம்
பொற்காசுகள் அனைத்தையும் கொடுத்தான். அவரோ, “தனக்குப் பாதி மட்டும் போதும்; மீதியை
நீயே வைத்துக் கொள்” எனச் சொன்னார்.
வணிகரிடம், தனக்கு வேறு புதிய சொற்களைக் கற்றுத் தருமாறு அப்பாவி கேட்டான்.
அவர், உடனே இரு சொற்களைச் சொல்லிக் கொடுத்தார். “மகிழ்ச்சியாய் இருங்கள். இந்தச்
சொற்களை யாரைப் பார்த்தாலும் சொல், சரியா?” என, அவர் சொன்னதும் அப்பாவி
மகிழ்ச்சியுடன் கிளம்பினான்.
நகரத்
தெருவில் அப்பாவி சென்றான். எதிரே வந்த ஒவ்வொருவரையும் பார்த்து ‘மகிழ்ச்சியாய்
இருங்கள்’ எனச் சொல்லிக்கொண்டே சென்றான்.
எதிரே
பெரும் ஊர்வலம் ஒன்று ஆரவாரமாக வந்தது. அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானைகள் வந்தன.
குதிரைப்படை வீரர்கள் வந்தார்கள். முரசுகள் அதிர, கொடிகள் பறக்க வந்தார்கள். என்ன
செய்தி...? வேட்டையாடுவதற்காகச் சென்றிருந்த அரசன் நாடு திரும்பிக்
கொண்டிருந்தான்.
அப்பாவி
அதனைப் பார்த்தான். காவலர்கள் தடுத்தார்கள். ஆனால், முண்டியடித்துக் கொண்டு
அரசனின் முன்பாகச் சென்றுவிட்டான். பவனி வந்த அரசனின் எதிரே நின்று,
“மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான்.
அரசன்
சினம் கொண்டான். “என்ன திமிர்! இந்த நாட்டின் அரசன் நான். என்னை வழி மறிந்து
வாழ்த்துகிறான் ஒரு பொடியன்” என்று கத்தினான். காவலர்களை அழைத்தான். அப்பாவியைச்
சிறையில் அடைக்கும் படி ஆணையிட்டான்.
உடனே அப்பாவி,
“மகிழ்ச்சியாய் இருங்கள்.” என்றான்.
அரசனுக்கு
இன்னும் சினம் மிகுந்தது. “இவன் என்னைக் கேலி செய்கிறான்; ஏளனப்படுத்திவிட்டான்.
இவனைக் கொலைக்களத்திற்குக் கொண்டுசென்று தலையை வெட்டுங்கள்”. என்று ஆணையிட்டான்.
அப்பாவியோ, “மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான்.
அப்பாவியைக் கொலைக்களத்திற்கு இழுத்துச் சென்ற வீரர்களிடமும்
“மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான். தலையை வெட்டுவதற்குத் தயராக வாளுடன் நின்ற
முரடர்கள் இருவரிடமும் அதே சொற்களைச் சொன்னான். முரடர்களுக்குப் புரியவில்லை.
தலையை வெட்ட வாளை ஓங்கினார்கள். அப்போது அப்பாவி “மகிழ்ச்சியாய் இருங்கள்”
என்றான்.
முரடர்களுக்குக் கண் கலங்கியது; வெட்ட ஓங்கிய வாள்களை அவர்கள் கீழே
போட்டுவிட்டார்கள்.
“கொலையாளிகள்
நாங்கள்! கொடூரமான முறையில் கழுத்தை வெட்டுகிறோம். எங்களைப்பார்த்து,
“மகிழ்ச்சியாய் இருங்கள்” என்று சொன்ன முதல் மனிதன் இவன்தான். இவன் சொற்களில்
கருணை இருக்கிறது. எங்களால் இவனை வெட்ட முடியாது. அரசர் எங்களை அரிவாளால் கூறுபோட்டாலும்
சரி; நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம்” என்றார்கள்.
எல்லாரும் அரசனிடமே சென்று அவனது முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லிக்
கேட்டார்கள். நடந்தவற்றை எல்லாம் சொன்னார்கள். அரசன் குழப்பம் அடைந்தான்.
அப்போது
வெளிநாட்டுப் பயணி அரசவைக்கு வந்தார். அப்பாவியைப் பார்த்ததும் கட்டிக் கொண்டார். “அரசே!
இவன்தான் உங்கள் நாட்டுப் பண்பாட்டை எனக்குப் புரிய வைத்தவன்” என்றார். மன்னன்
மகிழ்ச்சி அடைந்தான். அப்பாவியை விடுதலை செய்தான். அவனுக்குப் பொன்னும் பொருளும்
கை நிறைய வழங்கினான்.
பொன்பொருள்
முதலான பரிசுகளுடன் அப்பாவி, அம்மாவிடம் திரும்பினான். மகனை மகிழ்ச்சிப் பொங்க
அணைத்துக்கொண்டாள், அம்மா. “வணக்கம்... மகிழ்ச்சியாய் இருங்கள்!” என்று அம்மாவிடம்
சொன்னான், அப்பாவி.
No comments:
Post a Comment