Thursday

TNPSC Tamil - சித்தர் பாடல்

சித்தர் பாடல்   (Source TN Textbook)

  வைதோரைக் கூட வையாதே – இந்த

  வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே!

  வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை

  வீணில் பறவைகள் மீதில் எய்யாதே!

 

  பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன்

  பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே!

  வேம்பினை உலகில் ஊட்டாதே – உன்றன்

  வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே!

 

  போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப்

  புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே!

  சாற்றும்முன் வாழ்வை எண்ணாதே – பிறர்

  தாழும் படிக்குநீ தாழ்வைப் பண்ணாதே!

 

  கள்ள வேடம் புனையாதே – பல

  கங்கையிலே உன்கடம் நனையாதே!

  கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்

  கொண்டு பிரிந்துநீ கோள்முனையாதே!

 

பாடல் பொருள்:

    உன்னை வைதவரைக்கூட நீ வையாதே; இந்த உலகத்தில் எல்லாம் பொய்யாகப் போனாலும் நீ பொய் சொல்லாதே; பிறர்க்குத் துன்பம் தரும்செயல்களைச் செய்யாதே; கல்லெறிந்து பறவைகளைத் துன்புறுத்தாதே!

 

   பாம்போடு விளையாடாதே! பெண்களைப் பழித்துப் பேசாதே! பிறரிடம் கசப்பான சொற்களைப் பேசாதே! உன் இறுமாப்பைப் பிறர்க்குக் காட்டாதே!

 

   பிறர் கொண்டாடிச் செய்யும் சடங்குகளை நீயும் செய்யாதே! உன்னைப் புகழ்ந்து பேச, பிறர் வீடுகளுக்குச் செல்லாதே; உன் வாழ்வைப் போற்றி நீ பெரிதாக எண்ணாதே! பிறருக்கு இழிவை உண்டாக்கும் தாழ்வான செயல்களைச் செய்யாதே!

 

    போலி வேடங்களைப் போடாதே! புண்ணிய ஆறுகளைத் தேடித்தேடிப் போய் முழுகாதே! யாருடைய பொருளையும் திருட நினைக்காதே! ஒருவனோடு நட்புக்கொண்டு பிறகு அவனைப் பிரிந்து, அவனைப் பற்றிப் பிறரிடம் கோள்மூட்டிப் பேசாதே!

 

சொல்பொருள்:

 

வெய்யவினை – துன்பம் தரும் செயல்

வேம்பு – கசப்பான சொற்கள்

வீறாப்பு – இறுமாப்பு

பலரில் – பலர் + இல், பலருடைய வீடுகள்

புகலல் ஒண்ணாதே – செல்லாதே

சாற்றும் – புகழ்ச்சியாகப் பேசுவது

கடம் – உடம்பு

 

பாடல் குறிப்பு:

 

     ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்.

 

     பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.

 

   நம் பாடப்பகுதிப் பாடலின் ஆசிரியர் கடுவெளிச் சித்தர்.

 

   இவர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர். 

No comments:

Post a Comment

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....